×

நாளை ராமர் கோயில் திறப்பு விழா விழாக்கோலம் பூண்டது அயோத்தி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

அயோத்தி: ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடைபெற இருப்பதையொட்டி, அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடக்க உள்ளது. இதையொட்டி, கும்பாபிஷேத்திற்கான 7 நாள் பூஜைகள் கடந்த 16ம் தேதி தொடங்கின. கோயில் கருவறையில் 51 அங்குல குழந்தை ராமர் சிலை நேற்று முன்தினம் நிறுவப்பட்டது. குழந்தை ராமரை பிரதிஷ்டை செய்யும் முக்கிய பூஜை நாளை பிற்பகல் 12.20 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று, முறைப்படி கோயிலை திறந்து வைக்கிறார்.

இந்நிலையில், கும்பாபிஷேக விழாவிற்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் நேற்று மும்முரமாக நடந்தன. ராமர் கோயில் முழுவதும் வண்ண மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட எல்இடி திரைகளில் ராமாயண கதைகள் ஒளிபரப்பப்படுகின்றன. வீடுகளிலும் பூக்கள், வண்ண விளக்குகளால் மக்கள் அலங்கரித்துள்ளனர். இஸ்கான், நிகாங் சீக்கிய அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் அயோத்தி முழுவதும் சமையல் கூடங்களை அமைத்து பக்தர்களுக்கு இலவச உணவு பிரசாதங்களை 24 மணி நேரமும் வழங்கி வருகின்றனர். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க 8,000க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் 2 ஆயிரம் பேர் சாதுக்கள், 5,000 பேர் பல்வேறு துறையை சார்ந்த பிரபலங்கள். இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், அக்சய் குமார், அனுபம் கேர், அஜய் தேவ்கான், சிரஞ்சீவி, மோகன் லால், அல்லு அர்ஜூன், ஜூனியர் என்டிஆர், நடிகைகள் கங்கனா ரனாவத், மாதுரி தீட்சித், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர்கள் கவுதம் அதானி, அம்பானி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த பாஜ தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, இஸ்ரோ தலைவர் சோம்நாத் என 506 பேர் விவிஐபிக்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பிரதமர் மோடி உட்பட பல்வேறு பிரபலங்கள் கூடுவதால் அயோத்தியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராமர் கோயிலை சுற்றி பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கோயில் நுழைவாயில் பகுதியில் 1,400 பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கும்பாபிஷேக விழாவையொட்டி, அயோத்தி நகரமே பக்தி பரவசத்துடன் விழாக்கோலம் பூண்டுள்ளது.

* தவறான செய்திகள் வெளியிடக் கூடாது
ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சமயத்தில், சமூக நல்லிணக்கத்தையும் பொது ஒழுங்கையும் சீர்குலைக்கும் வகையில் சரிபார்க்கப்படாத, ஆத்திரமூட்டும் மற்றும் போலியான செய்திகள் ஊடகங்களில் குறிப்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு, செய்தித்தாள்கள், தனியார் தொலைக்காட்சி சேனல்கள் செயல்பட வேண்டும். தவறான, மதநல்லிணக்கத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு விளைவிக்கும் செய்திகளை தவிர்த்து, அவை வெளியாகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலும் கொண்டாட்டம்
* அயோத்தியில் புதிய மசூதி கட்டும் பணி, ரம்ஜான் மாதமான வரும் மே மாதம் தொடங்கும் என இந்திய, இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளையின் மேம்பாட்டு கமிட்டி தலைவர் ஹாஜி அர்பத் ஷேக் கூறி உள்ளார்.
* ‘அயோத்தி ராமர் கோயில் அகண்ட பாரதத்தை நோக்கி எடுத்து வைத்துள்ள அடி. கடவுள் விரும்பினால், ஆப்கானிஸ்தான் வரையிலும் அகண்ட பாரதம் விரிவடையும்’ என மபி முதல்வர் மோகன் யாதவ் கூறி உள்ளார்.
* அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி அமெரிக்கா முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான இந்து கோயில்களில் சிறப்பு கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன. பாட்டு, இசை, நடன கொண்டாட்டங்களுடன் கார் பேரணிகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் இருந்து ஜனவரி 31, பிப்ரவரி 21 மற்றும் 27ம் தேதிகளில் 3 சிறப்பு ரயில்கள் அயோத்திக்கு இயக்கப்படுவதாக திரிபுரா பாஜ இளைஞர் அணி பொது செயலாளர் ரானா கோஷ் தெரிவித்துள்ளார்.

The post நாளை ராமர் கோயில் திறப்பு விழா விழாக்கோலம் பூண்டது அயோத்தி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Ayodhya ,Ram ,Ram Temple ,Ayodhya, Uttar Pradesh ,Kumbabhishema ,
× RELATED அயோத்தி கோயிலில் ஜனாதிபதி தரிசனம்